Monday, December 8, 2008

அகிலத்திரட்டு தரும் அறிவுரை

நாளும் பல ஊழியங்கள் நமக்கு மிகச் செய்திடுங்கோ!
பொருள்:
மனித வாழ்க்கையில் விடியும் ஒவ்வொரு நாளும் இறைவன் ஏற்றுக்கொள்ளத்தக்கதான பொதுச் சேவைகளை முடிந்தமட்டும் செய்துகொண்டே இருங்கள்.

ஏவல் கண்டு உங்களை நான் இரட்சித்து ஆண்டு கொள்வேன்!
பொருள்:
உங்களுடைய சேவையை இறைவன் தனக்குச் செய்த சேவையாக ஏற்று அந்தந்த சேவைகளுக்கு ஏற்ப நமக்கு நற்கதியை அருள்வேன்.

சுமந்த பொற்பதத்தின் சுகம் பெற்று நீ வாழ்வாய்!
பொருள்:
நீ உன் மனதில் எதைச் சுமந்து கொண்டிருக்கிறாயோ அதற்கேற்பவே உனக்கு பலன் அருளப்படுகிறது.

விளக்கின் ஒளி போல் வீரத்தனமாய் இருங்கோ!
பொருள்:
விளக்கு ஏழை, பணக்காரன், வலியோர், எளியோர், படித்தோர், படியாதோர், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்று பேதம் பார்க்காமல் தனக்கே உரிய வெளிச்சத்தை கொடுப்பதைப் போல், நீங்களும் பாகுபாடற்ற நிலையில் பயப்படாமல் உங்களால் முடிந்த நற்செயல்களை செய்து கொண்டே இருங்கள்.

தாழக்கிடப்பாறை தற்காப்பதே தர்மம்!
பொருள்:
வாழ்க்கையை வாழ முடியாமல் வதங்குகின்ற ஏழைகளுக்கு ஏதேனும் ஒரு உதவியைச் செய்து அவர்களின் வாழ்நாளுக்கு வழி செய்வது, தர்மத்தில் எல்லாம் தலையாய தர்மமாகும்

அய்யா வைகுண்டசாமி அவதார வரலாற்றுச் சுருக்கம்




உலகில் தர்மம் குன்றி அதர்மம் மிஞ்சி நிற்கும் காலங்களில் எல்லாம், நிகழுகின்ற அதர்மத்தை அழிக்க இறைவன் மனித உருவில் தோன்றி அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டி இருக்கிறார். அப்படி கலியுகத்தில் அவதரித்தவரே அய்யா வைகுண்டசாமி.
நிகழும் கலியுகத்திற்கு முன்புள்ள யுகங்களில் அதர்மம் புரிந்த அரக்கர்களுக்கு உடல் இருந்தது. எனவே இறைவனும் தாம் பிறப்பதற்கு தகுதியான தாயின் மணிவயிற்றில் ஜெனித்துப் பிறந்து அவ்யுக அரக்கர்களை அழித்து தர்மத்தை நிலை நாட்டினார். இத்தகு செயல்பாடுகளை மும்மூர்த்திகளில் ஒருவர் என்றும் காக்கும் கடவுள் என்றும் போற்றப்படுகிறது. மகாவிஷ்ணு அவதரித்து செய்துள்ளார்.
ஆனால் கலியுகத்தில் அதர்மத்தின் மொத்த உருவமாக திகழும் கலிக்கு உடல் இல்லை. மாயையாகிய அக்கலி மனிதர்களின் மனங்களில் புகுந்து தீய எண்ணங்களை தூண்டிக்கொண்டிருப்பதால், மதவெறி, சாதிவெறி, பொருள் ஆசை, பெண்ணாசை போன்ற அவலங்களில் உலகம் சிக்கித் தவிக்கிறது.இந்நிலைகளால் பாமர மக்கள் பரிதவித்தனர். ஒடுக்கப்பட்ட மக்கள் உள்ளம் புழுங்கினர். ஆன்மீக புலமை உள்ளோர் அதற்கோர் விடிவு வேண்டி ஆண்டவனை நோக்கி முறையிட்டார்கள். விடிவு, யுகாயுகங்கள் தோறும் அவதாரம் புரிந்து அதர்மத்தை அழித்த விஷ்ணு மட்டும், மீண்டும் அவதாரம் எடுத்து கலியை அழிக்க முடியாது. நிகழுகின்ற கலியுகம் உருவமற்ற கலி என்னும் மாயையால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. அது ஆயுதத்தால் சாகாது. என உணர்ந்த இறைவன் அன்பை படையாகவும், தர்மத்தை ஆயுதமாகவும், பொறுமையையை கேடையமாகவும், புவனமெங்கும் விதைத்து அதன்மூலமே வம்பானகலியை வதைக்க வேண்டும் என வரையறுத்த இறைவன் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் ஒரு மூர்த்தியாக திரண்டு கலியுக பரிபாலனம் செய்யவேண்டும் என திட்டமிட்டார் அதன்படியே கொல்லம் ஆண்டு 1008 மாசி 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமைக்கு சரியான 4.3.1833 ல் திருச்செந்தூர் கடலுக்குள் வைகுண்டப் பரமபொருள் உதித்து வந்தார். அனேக நாமங்களோடு அதுநாள் மட்டும் இயங்கிய இறைவன், ஏகப்பரம் பொருளாக, திருப்பாற்கடலுக்குள் உதித்து இவ்வுலகிற்கு எழுந்தருளும் தருணத்தில் தெச்சணா பூமியின் புருவ மத்தியாக விளங்கும் சாமிதோப்பில் பேறுகள் பல பெற்ற புண்ணியவதி அன்னை வெயிலாலின் மணி வயிற்றில் பிறந்த முடிசூடும் பெருமாள் அன்பு சொரூபியாக வாழ்ந்து, 22 வயதில் நோய்வாய்ப்பட்டு, 24-வது வயதில் இறைவனின் நியம்படி , திருச்செந்தூர் கடலில் தீர்த்த மாடச்சென்று அக்கடலிலேயே சங்கமித்தார்.சமுத்திரத்தில் சங்கமித்த அந்த சமதர்ம நாயகனின் உடல்தோற்றம் போல் உருவெடுத்து பூவுலகிற்கு செல்வதே, இவ்யுகத்தை பரிபாலனம் செய்ய ஏற்றதாக இருக்கும் என எண்ணிய இறைவன் தம் அரூப உடலுக்கு முடிசூடும் பெருமாளின் உடல் ரூபம் ஏற்பட எண்ணினார்.

இதுவே உபாயமாய உடல் எனப்படுகிறது.அவ்வுடலோடு மானிடர்களுக்கு காட்சி அளித்த அந்த மாயாதி, சூட்சன், வைகுண்டர் என்ற பெயரேடு தாம் காட்டும் உடலுக்கு உரியவன் வாழந்த சாமிதோப்பை நோக்கி வந்தார். "சாமி தோப்பு" ஆண்டாண்டு காலமாக ஆன்மீக வளம் பொருந்திய அற்புதமான பூமி. அதுவே பூமி பந்தின் திலர்தம் என போற்றப்படும் தெச்சணத்தின் தென்பகுதி ஆகும். அங்கே தம்மை ஒரு தபோதனைபோல் காட்டிக்கொண்டு நோயினால் வருந்துவோர்க்கும், வறுமையால் வாடுவோர்க்கும், தீண்டாமை என்னும் இனவெறியால் பாதிக்கப்பட்டோருக்கும், அவர் அவர் தம் குறை அறிந்து அவர்களுக்கு வேண்டியவற்றை அருள் பாலித்தார். வைகுண்டசாமியின் அருள் பிரதாபங்கள் அவனி எங்கும் பரவிற்று. சாதி, சமய, பேதங்களை கடந்து சாரைசாரையாக சாமிதோப்பை நோக்கி, ஜனவெள்ளம் வந்து தேங்கின. வைகுண்டசாமியை அய்யா என்று அன்பு செலுத்தி பக்தி பரவசத்தோடு மக்கள் பணிவிடை புரிந்தனர். வைகுண்டசாமியோ தம்மை நாடிவரும் பக்தர்களை, அன்புக்கொடி மக்களே என அரவணைத்தார். சர்வேஸ்வரனாக இருந்தும் சாதாரண மனிதனைப்போல் மக்களோடு மக்களாக ஒன்றி உறவாடினார். மக்களும் அவரை விண்ணகத்து அரசன் என நினைக்கவில்லை. நினைக்க முடியவில்லை மண்ணகத்தில் வாழ்ந்த முடிசூடும் பெருமாளாகவே கருதினர். அதையே இறைவனும் இக்கலி முடிக்க இதமாக எடுத்துக் கொண்டார்.

"தர்மம் வைகுண்டம், தான் பிறந்தேன் இப்போது" "தீமை என்ற சொல், இனிமேல் இருக்காது இப்புவியில்" என்று தன் நிலை விளக்கத்தை மறைமுகமாக மக்களுக்கு புகட்டிய வைகுண்டசாமி, காணிக்கை, கைகூலி, காவடிகள், தூக்காதீங்கோ, ஞாயமுறைதப்பி நன்றி மறவாதீங்கோ, மாய நினைவு மனதில் நினையாதீங்கோ, தீபாதாரனை காட்டாதீங்கோ, திருநாளை பாராதிருங்கோ, நிலையழியாதிருங்கோ, நீதியாய் நின்றிடுங்கோ, கருதி இருங்கோ, கருத்து அயர்ந்து போகாதீங்கோ, நல்லோரே ஆக வென்றால், ஞாயம் அதிலே நில்லுங்கோ, தர்மயுகத்திற்கு தானேற்ற வஸ்து எல்லாம் நீங்கள் இனி திட்டித்து வைத்திடவும் வேண்டுமல்லோ எனவே வைகுண்டா என்று மனதில் நினைத்திருங்கோ என்பன போன்ற எண்ணரிய உபதேசங்களை கூறி மக்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டினார். ஒடுக்கப்பட்ட ஆடவர்கள் முழங்காலுக்கு கீழ் வேட்டி கட்டக் கூடாது. அங்க வஸ்திரம் அணியக் கூடாது என்று அரசாங்க சட்டம் இருந்த அந்த கால கட்டத்தில் தலைப்பாகை அணிந்து தான் இறைவழிபாடு செய்யவேண்டும் என்றும், பெண்கள் தோள் சீலை அச்சம் அன்றி அணிய வேண்டும் என்றும், மனோத்ததுவ ரீதயாக புத்தி போதித்து தம் மக்களை தலை நிமிர்ந்து நிற்க செய்தார். தீண்டாமை என்னும் தீயசக்தியை வேரோடு பிடுங்கும் விதத்தில் திருமண்ணை எடுத்த தம் பக்தர்களின் நெற்றியில் தொட்டு நாமம் சாற்றினார். உங்களுக்கு தெரிந்த பாசையில் இறைவனை போற்றி நீங்களே பணிவிடை செய்யுங்கள் என்று காலை, மாலை இருவேளயும் உகப்படிப்பையும், மதியம் உச்சிப்படிப்பையும் தம் மக்களுக்கு அறிமுகபடுத்தி வழிபடச் செய்தார். எளியோர், வரியோர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரையும் சமமாக அமர்த்தி அன்னம் கொடுத்து சமபந்தி போஜனம் நடத்தினார். சாதிக்கொரு கிணறு என்றிருந்த காலத்தில், எல்லோரும் ஒரே கிணற்று நீரை குளிக்கவும், குடிக்கவும் செய்தார். கூட்டு வழிபாட்டு மூலமே கலி என்கிற அரக்கனை வேட்டையாட முடியும் என்று "தர்மம் பெரிது தாங்கி இருங்கோ மக்காள், தாழக்கிடப்பாறை தற்காப்பதே தர்மம்" என்று தர்ம நெறிகளை போதித்தார். "மானமாக வாழ்ந்தால் மாலும் கலி தன்னாலே" என்று கூறி மக்களுக்கு தன்மான உணர்வுகளை ஊட்டினார். "தர்மம் கொடுக்கிற பேர்கள் உண்டு, வாங்குகிற பேர்கள்" என்ற காலத்தை நீங்கள் எல்லோரும் சேர்ந்து ஏற்படுத்தினால் அதுவே தர்மயுகம் ஆகும். தர்ம யுகத்தை நீங்கள் எல்லோரும் அடைய வேண்டுமானால் இறைவன் படைத்த எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்தி அரவணைத்து வாழவேண்டும். ஆடு, கிடாய், கோழி போன்றவற்றை பலிஇட்டு இறைவனை வணங்கும் மூடநம்பிக்கைகளை முற்றிலும் நீங்கள் துறக்கவேண்டும் என்று இறைவழி பாட்டிற்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தினார். வைகுண்டசாமியின் உபதேசங்களாலும், அருள் பாலிப்புகளாலும், வழிபாட்டு, வழிகாட்டல்களாலும் பல சாதி மக்களும் பயன் அடைந்தனர் . தீண்டாமை என்னும் தீய சக்தியின் கொடுமையினால் உலகில் வேண்டா வெறுப்பாக வாழ்ந்து கொண்டிருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் எல்லாம் வைகுண்டசாமியை தன்னை பெற்றவராகவே நினைத்து போற்றி புகழ்ந்து பக்தி செலுத்தினர். இந்நிலை கலி வயப்பட்டோரின் கண்களை உறுத்தியது. சாமித்தோப்பில் சமதர்ம சாம்ராஜ்யம் ஒன்று உருவாகிக் கொண்டிருக்கறதே என்று மனம் தவித்த அக்கொடியவர்கள், திருவாங்கூர் மன்னனிடம் புகார் செய்தார்கள். கலி ஆதிக்கத்தால் கருத்திழந்த மன்னவனும் வைகுண்டசாமியை சிறை பிடித்து வர தம் படைகளை அனுப்பினார். படைகள் சாமித்தோப்பை நாடி விரைந்தன. வைகுண்டசாமியை கைது செய்தார்கள். கயிற்றினால் வரிந்து கட்டி சாலையில் இழுத்துச்சென்றார்கள். சாராயத்தில் விஷத்தைக் கலந்து விருந்தென கொடுத்தார்கள். சுண்ணாம்பு காள வாயில் வைத்து நீற்றினார்கள். டன் கணக்கில் விறகுகளை அடுக்கி கொளுத்தி நெருப்பாக்கி அந்த நெருப்பிலே நடந்துவர செய்தார்கள்.

வைகுண்டசாமியோ விஷத்திற்கே விஷமானார். நெருப்பின் கொடிய நாக்குகள் அந்த நெடியேனை தீண்டவில்லை. இது கண்டு மிரண்ட மன்னன் இறுதியாக காட்டு புலியை பிடித்து வந்து மூன்று நாள் பட்டினிபோட்டு புலியை அடைத்து வைத்திருந்த கூண்டிற்குள் புலிக்கு இறையாக்க வைகுண்டசாமியை தள்ளினான். பசித்த புலியோ அந்த பரம்பொருளின் பாதார விந்தங்களை வணங்கி நின்றது.
இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் கண்கொட்டாது பார்த்துக் கொண்டிருந்த மன்னனும், மன்னனின் படைகளும் இவர் மனிதனே அல்ல, இவரே இந்த கலியுகத்தை முடிக்கும் பூரண இறை அவதாரம் என உணர்ந்தனர்.

சோதனைகளை எல்லாம் வென்று மீண்டும் சாமி தோப்பிற்கு வந்த வைகுண்ட பரம்பொருள். தம் மக்களை தவவலிமை மிக்கவர்களாக்க எண்ணி ஏழு நூறு குடும்பத்தார்களை துவையல் தவசு செய்யச் செய்தார். அவர்களின் மூலம் ஊர், ஊராக தம் வழிபாட்டு ஆலயங்களை ஏற்படச்செய்தார். சைவம், வைணவம் என பிரிந்து கிடந்த ஆன்மீக உலகத்தில் அய்யா சிவ சிவா அராகரா என்ற அகண்ட நாம மந்திரத்தை உச்சரித்து வழிபடும் முறையை உருவாக்கிக் கொடுத்தார். அன்புக்கொடி மக்களின் வழிபாட்டுமுறை சைவ, சித்தாந்திகளையும், அன்புக்கொடி மக்கள் நெற்றியில் இட்டு கொள்ளும் ஒன்றை திருநாமம் வைணவர்களையும் கவர்ந்து ஈர்த்தது. எனவே இன்று அய்யா வைகுண்டசாமி வழிபாட்டு ஆலயங்கள் இந்தியா முழுவதும் வேராயிரம் பெற்ற விழுதுகளாய் படர்ந்து ஆறாயிரத்திற்கு மேல் தோன்றி உள்ளது.